English (ஆங்கிலம்) தமிழ் மொழியில் படியுங்கள்

உங்கள் வணிகம் அல்லது நிறுவனத்தின் ஆரம்ப நிலைகளில் பெரும்பாலான நிர்வாக முடிவுகள் அதன் உரிமையாளராலேயே மேற்கொள்ளப்படும். எனினும் வணிகம் விரிவடையும் போது ஒரு தெளிவான குடும்ப வணிக நிர்வாக கட்டமைப்பை கொண்டிருத்தல் முக்கியமானது. வணிகத்தினுடைய சரியான கட்டத்தில் சரியான நிர்வாக கட்டமைப்பை கொண்டிருத்தல் வணிகத்தின் நிலைத்தன்மைக்கு ஆதாரமாக அமையும். ஆகவே உங்களுடைய வணிகத்தினுடைய படிநிலைகள் மற்றும் அவற்றிற்கு தேவையான நிர்வாக கட்டமைப்பு பற்றி நோக்குவோம்.

நிலை 1: நிறுவனத்தை தோற்றுவித்தவர்கள்

இந்த நிலையில்  நிறுவனர்களின் முழுமையான பொறுப்பின் கீழ் வணிகத்தின் வெற்றியை நோக்கி நிர்வகிக்கப்படுகிறது. பெரும்பாலான முடிவுகள் அவர்களின் சொந்த முடிவுகளாக இருக்கும். இந்த நிலையில் மேற்கொள்ளப்படும் அனைத்து முடிவுகளும் ஒருவருக்கொருவர் தொடர்ச்சியான தொடர்பிலுள்ள ஒரு குழுவினரின் ஊடாக செல்லும். வங்கி செயன்முறைகள் போன்ற சில செயற்பாடுகளின் போது மாத்திரம் நிபுணர்களின் ஆலோசனையை பெறும் சில அரிதான சந்தர்ப்பங்கள் அமையலாம்.

வணிகம் தனது ஆரம்ப கட்டத்தில் இருப்பினும் கூட அதன் எதிர்காலம் தொடர்பான திட்டமிடலை மேற்கொள்ள அது தாமதமான பருவம் அல்ல. அடுத்தடுத்த திட்டமிடலை (succession planning) மேற்கொள்ள இதுவே சரியான தருணம் ஆகும்.  தலைவர்களை இனங்கண்டு அவர்களை காலத்துடன் விருத்தி அடைய செய்தல் எதிர்காலத்தில் தலைமைத்துவத்தில் மாற்றத்தினை இலகுவாக மேற்கொள்ள வழிவகுக்கும்.

நிலை 2: அடுத்த தலைமுறை

சகோதர கூட்டு” எனவும் கூறப்படும். இந்த நிலையிலேயே நிர்வாகம் மற்றும் நடைமுறைப்படுத்தல் அடுத்த தலைமுறையினருக்கு மாற்றம் செய்யப்படுகின்றன. இந்நிலையில் புதிய தலைமைத்துவமானது புத்துணர்ச்சி ஊட்டுவதாக அமைகின்றது. ஏனெனில், சந்தைப்பங்குகள் விரிவடைவதுடன் வணிகத்தின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட தனி நபர்களுடன் இணைந்து புது விதமான சிந்தனைகள் மற்றும் உற்பத்திகளும் கிடைக்கின்றன. எவ்வாறெனினும் அதிகளவான குடும்ப உறுப்பினர்கள் வணிகத்துடன் இணைந்திருக்கும் போது குழப்பங்கள் மற்றும் நிர்வாக சிக்கல்கள் மிகவும் பொதுவான விடயமாக அமையப்போகின்றது. பாரபட்சம் மற்றும் கட்டுப்பாடின்மை ஆகியன பிரதான இரண்டு பிரச்சினைகளாக உருவெடுக்கக்கூடும். இந்த நிலையின் போது வணிக செயன்முறைகளை உறுதி செய்தல், நிலையான தொடர்பாடல் வழிகளை உருவாக்குதல் மற்றும் அடுத்தடுத்த  திட்டத்தை விரிவாக்கல் ஆகியன முக்கியமாகும். அத்துடன் இந்நிலையிலேயே வணிகத்தின் முகாமைத்துவ அம்சங்களுக்கு குடும்பத்தினை தாண்டி புற வளங்களை பெற்றுக்கொள்வதில் கவனத்தை செலுத்தல் வேண்டும்.

நிலை 3: குடும்ப மரபு

குடும்ப மரபு என்பது உறவு கூட்டணி, உறவு நட்பமைப்பு அல்லது குடும்ப வம்சம் எனவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில் வணிகத்தின் நிர்வாகமானது மிகவும் சிக்கலானதாக மாறுகின்றது ஏனெனில், குடும்பத்தில் பிள்ளைகள், ஒன்று விட்ட உறவுகள் மற்றும் மருமக்கள் போன்ற பலரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ வணிகத்தில் செல்வாக்கு செலுத்துகின்றனர். மிகவும் அதிக எண்ணிக்கையான இந்த உறவுகள் குடும்பத்தில் ஒவ்வொரு அங்கத்திலும் இருப்பதனால் வணிகம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் மற்றும் பொது செயன்முறைகள் எவ்வாறு இடம்பெற வேண்டும் என்பதில் ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட கண்ணோட்டங்கள் காணப்படும். அத்துடன் குடும்பத்தினுள் முன்னர் நிலவிய குழப்பங்கள் மற்றும் பிரச்சினைகள் அடுத்த தலைமுறை உறவுகள் இடையேயும் செல்வாக்கு செலுத்தக்கூடும். இதன் விளைவாக இந்நிலையானது கவனிக்கப்படவேண்டிய பெரும்பாலான நிர்வாக சிக்கல்களை கொண்டிருக்கும். எனவே, இந்நிலையில் சில கொள்கைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். பின்வருவன அவற்றுள் அடங்கும்,

  • குடும்ப உறுப்பினர் வேலையமர்வு
  • குடும்ப பங்குடைமை உரிமை
  • பங்குதாரர் பணப்புழக்கம்
  • பங்கிலாப கொள்கை
  • வணிகத்தில் குடும்ப உறுப்பினர்களின் அங்கங்கள்
  • குடும்ப மோதல் தீர்வு
  • குடும்ப நோக்கம் மற்றும் குறிக்கோள்

இந்த நிலைகள் வணிக மேம்பாடு ஒரு நேரியல் செயல்முறை என்பதை குறிக்கின்றதெனினும் அனைத்து நிறுவனங்களும் மேம்பாடு அல்லது வளர்ச்சியில்  இம்மூன்று நிலைகளுக்கும் முகங்கொடுக்காது. சில வணிகங்கள் உரிமையாளராலேயே நிர்வகிக்கப்பட்டு விருத்தியினை காண முடியாததாக மாறுவதுடன், சில வெளிப்புறத்தினருக்கு முழுமையாக வாய்ப்பளிப்பதாக இருக்கும். மேலும் சில பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் முழுமையான கட்டுப்பாட்டு உரிமத்தை கொண்ட குடும்பத்தினராலேயே நிர்வகிக்கப்படுவதாக உள்ளன. ஆகவே, வணிகத்தின் தன்மை மற்றும் செயற்படுத்தக்கூடிய நடைமுறை கட்டுப்பாடுகளை பொறுத்து ஒரு குடும்ப நிர்வாக வணிகமானது கட்டுப்பாட்டு வரைமுறையை அமைத்துக்கொள்ள வேண்டும்.


English (ஆங்கிலம்) தமிழ் மொழியில் படியுங்கள்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here