English (ஆங்கிலம்) தமிழ் மொழியில் படியுங்கள்

ஒரு புதிய வணிகத்தை ஆரம்பிக்கும்போது, குறிப்பாக உங்கள் குடும்பத்தினர் அல்லது நெருங்கிய நண்பர்களின் வணிகமெனின் அனைத்து உறுப்பினர்களும் நிலைப்படுத்தப்பட்டுள்ளனர் மற்றும் பிரச்சினைகளை இலகுவாக நிவர்த்தி செய்ய முடியும் எனவும் தோன்றலாம். துரதிர்ஷ்டவசமாக, பிரச்சினைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் எந்த நேரத்திலும் ஏற்படக்கூடும் மற்றும் பிரச்சினைகளை துல்லியமாகத் தீர்ப்பது மிகவும் கடினமாக இருக்கும். ஏனெனில், நெருக்கமான தொடர்புகள் மற்றும் தேவையின்மை, நேரமின்மை போன்ற காரணங்களால் பல அவ்விடயங்கள் குறிப்பெடுக்கப்படாமல் இருந்திருக்கக்கூடும். மக்கள் தனித்துவமானவர்கள் மற்றும் விடயங்களை வெவேறு கண்ணோட்டங்களில் நோக்குவர். வணிகத்தை நடாத்துவதில் கருத்துவேறுபாடுகள் ஏற்படும்பொழுது, அவர்கள் விடயங்களை நோக்கும் பார்வைகளின் வேறுபாடு நீங்கள் நினைத்ததை விட பெரிதாக இருக்கும்.

நீங்கள் தனி நிறுவனராக, மற்ற எவருக்கும் பங்குகளை வழங்கவில்லை எனின் உங்களிடம் இணை நிறுவனர், முதலீட்டாளர்கள் மற்றும் முக்கிய ஊழியர்கள் இருப்பார்கள். ஆனால் நீங்கள் ஆரம்பகட்டத்தில் இருக்கும்போது, உங்கள் தனிப்பட்ட முறையில் இயங்கும் நிறுவனத்திற்குள் பங்குதாரர்களின் வெவ்வேறு உரிமைகள் மற்றும் கடமைகளை அமைக்க வேண்டிய அவசியத்தை நீங்கள் உணர்ந்திருக்கமாட்டீர்கள். மேலும், நீங்கள் ஒரு வலுவான பங்குதாரர் உடன்படிக்கைக்கு முன்னுரிமை அளிக்க முனையமாட்டீர்கள். இந்த ஒப்பந்தமானது உங்கள் உறவுகள் மற்றும் நண்பர்களிடத்து உணர்வுபூர்வமாக எதிரான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் வணிகத்தின் நிலையான போக்கில் சாய்வினையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் எனவும் எண்ணலாம். எவ்வாறெனினும் இது நீங்கள் நினைப்பதிலிருந்து முற்றிலும் எதிரான தாக்கத்தையே ஏற்படுத்தும்.

ஒரு பங்குதாரர் ஒப்பந்தமானது வணிகத்தினுள்ளே சிறப்பான தொடர்பினை பேணவும் வணிகம் செயற்படவுள்ள விதம் மற்றும் அவசர சூழ்நிலைகளில் நிகழக்கூடிய விடயங்களை பற்றியும் பங்குதாரர்களை தெளிவுபடுத்துவதற்காக கட்டமைக்கப்படுகிறது. இது அனைத்து பங்குதாரர்களும் பின்பற்ற வேண்டிய நடைமுறையை கூறுவதுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் சந்தர்ப்பங்களில் அவை கடுமையான வன்முறையாக மாற்றமடையாது தடுக்கும் வகையில் விளக்கத்தை ஏற்படுத்தவும் வழிவகுக்கின்றது. பெரும்பாலும் பங்குதாரர் ஒப்பந்தமானது அனைத்து தரப்பினரையும் உதவுகின்றது. இது கூட்டு தீர்மானம் மேற்கொள்ளும் செயன்முறைகளில் வணிகத்தை இணக்கமாக கட்டியெழுப்புவதுடன், சூழ்நிலை நமது திட்டமிடலின் படி அமையாத போது அதற்கான எழுத்து மூலமான பதில்களை அல்லது நிலைகளை கொண்டிருக்கும். 

பொதுவாக பங்குதாரர் ஒப்பந்தம் பின்வருவனவற்றை உள்ளடக்கியிருப்பதோடு இது எல்லா வணிக கட்டமைப்புகளுக்கும் பொருத்தமானதாகும்,

நிர்வாக இயக்குனர் குழு 

இது ஒரு கட்டமைப்புடனான மேற்பார்வை குழு என்பதுடன் பாரிய வணிகங்களில் முகாமைத்துவ குழுவிலிருந்து தனிப்பட்டதாக இருக்கும், அதே வேளை சிறு வணிகங்களில் அவ்வாறான பிரிவுகள் இருக்காது. பங்குதாரர் ஒப்பந்தத்தில் இது பின்வருவனவற்றை கொண்டிருக்கலாம்:

 • நிர்வாக இயக்குனர்களின் அமைப்பு மற்றும் நியமனம் தொடர்பான குறிப்பிட்ட விதிமுறைகள் 
 • நிர்வாக இயக்குனர் குழுவில் இருக்கக்கூடிய அங்கத்தவர்களின் எண்ணிக்கை 
 • நிர்வாக உரிமமற்ற இயக்குனர்களின் இருப்பு மற்றும் நியமனம்
 • இயக்குனர்களின் பங்குதாரர் வட்டி
 • அதிகாரங்கள் மற்றும் உரிமைகள் வெளிப்படையாக குழு அல்லது குறிப்பிட்ட பணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
 • குழுக்களின் சிறப்பு அணிகள் அல்லது சிறப்பு அறிக்கையிடல் முறைகள்
  உதாரணத்திற்கு: கணக்குப்பரிசோதனை நடவடிக்கைகள்

வாக்குரிமை 

2007 இன் நிறுவன சட்டத்தின்படி சில தீர்மானம் நிறைவேற 51% வாக்குகள், அதேநேரம் சிலவற்றிற்கு 75% பெரும்பான்மை பெறப்படல் வேண்டும் போன்ற நிபந்தனைகள் காணப்படும். எனினும் நிறுவனத்தை பாதிக்கக்கூடிய சில முடிவுகள் (உ+ம்: நிதி, முக்கிய குறிக்கோள்கள்) நிறுவன சட்ட முறைகளுக்கு அப்பாற்பட்டதாக உள்ளன. எனவே மாறான விதிமுறைகள் இல்லாதபட்சத்தில் இவ்வாறான முடிவுகள் இயக்குனர் குழுவிடம் விடப்படுகின்றன

மேலும் பங்குதாரர் ஒப்பந்தத்தில் அனைத்து பங்குதாரர்களினதும் இணக்கத்தின் கீழேயே ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதுடன் நிறுவன கட்டமைப்பு தொடர்பான ஆவணத்திற்கு 75% பெரும்பான்மை போதுமானது ஆகும். ஆகவே, பங்குதாரர் ஒப்பந்தமானது சிறுபான்மை பங்குதாரர்களுக்கு மேலதிக பாதுகாப்பை பெற்றுத்தருகின்றது.

பணப்புழக்கத்தை கருத்தில்கொள்ளல்

ஏற்கனவே இருக்கும் பங்குதாரர் ஒருவருக்கு மேற்கொள்ளப்படும் கொடுப்பனவானது நிறுவனத்தின் பணப்புழக்கத்தை எந்த விதத்திலும் பாதிக்காது என்பதை உறுதிப்படுத்துவதன் மூலம் நிறுவனம் மற்றும் அனைத்து பங்குதாரர்களை பாதுகாப்பது மிகவும் முக்கியமாகும். எவ்வாறெனினும் ஒரு பங்குதாரர் வெளியேற முனையும் போது அவருடைய பங்குகளுக்குரிய கொடுப்பனவினை வழங்குவது நிறுவனத்தின் கடமையென பங்குதாரர் ஒப்பந்தம் கூறுகின்றது.

பங்கு பரிமாற்றம் 

பங்குகளின் பரிமாற்றத்தை நிர்வகிப்பதற்கு சில விதிமுறைகள் காணப்படுகின்றன. உதாரணத்திற்கு,

 • கட்டுப்பாடு: சில பரிவர்த்தனைகளுக்கு நிச்சயமாக ஒரு குறிப்பிட்ட பங்குதாரரின் ஒப்புதல் தேவைப்படுகிறது.
 • வெளிநபர்கள் பங்குரிமம் கொள்ளுதலை தவிர்த்தல்: பங்குகள் புதிய பங்குதாரர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட முன்னர் ஏற்கனவே இருக்கும் பங்குதாரர்களுக்கு வழங்கப்படல் வேண்டும்
 • மரணம் அல்லது விவாகரத்தின் போது கொடுப்பனவளித்தல்:பங்குகளை கணவன்/மனைவி அல்லது வாழ்க்கைத்துணை தவிர வேறு குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு மாற்றம் செய்தல். 

பங்கு மதிப்பீடு 

ஒரு பங்குதாரர் வெளியேற விரும்பும்போது பங்குகளை மதிப்பிட சில விதிமுறைகள் உள்ளன.

சர்ச்சைத் தீர்வு

பங்குதாரர் ஒப்பந்தமானது பங்குதாரர்களுக்கிடையேயான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சில பொறிமுறைகளை வழங்குகின்றது. அத்துடன் பிரச்சினைகள் இரகசியமாக பேணப்படுவதையும் இது உறுதிப்படுத்துகிறது. பல நிறுவனங்கள் அனைத்து பங்குதாரர்களும் நடுவர்களின் தீர்வினை பின்பற்றக்கூடிய வகையிலான நடுவுநிலைமை வாசகங்களையும் கொண்டுள்ளன. 

ஈவுத்தொகை கொள்கை

நிறுவனமானது பங்குதாரர்களிடையே நல்லிணக்கத்தை பேணுவதற்கு ஈவுத்தொகை கொள்கை ஒன்றினை பேண வேண்டும்.

இக்காரணிகள் உங்களது பங்குதாரர் ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருக்கலாம் அல்லது இல்லாதிருக்கலாம். ஒவ்வொரு பங்குதாரர் ஒப்பந்தமும் ஒவ்வொரு வணிகம் மற்றும் அதன் பங்குடைமையாளர்களுக்கு ஏற்றாற்போல் அமையும் என்பதனை உணர்தல் முக்கியமானது. எந்தவொரு விரும்பத்தகாத சூழ்நிலைகளும் ஏற்படுவதற்கு முன் ஒப்பந்தம் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளத்தக்கது என்பதை முன்கூட்டியே ஒத்துழைத்து உறுதிப்படுத்துவது பங்குதாரர்கள் கையில் தங்கியுள்ளது.


English (ஆங்கிலம்) தமிழ் மொழியில் படியுங்கள்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here